ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வழக்கின் தன்மை கருதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கில் கைது செய்யப்பட்டள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்தது. இதற்கான மனுவை மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டு பாலியல் வழக்கில் கைதான 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.