நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து குறைவாக உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, மிளகாய், இஞ்சி விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. தக்காளியின் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி கிலோ நேற்று ரூ.120-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.10 உயர்ந்து ரூ.130-க்கு விற்கப்பட்டது.
தக்காளி வரத்து குறைவாக உள்ளதையடுத்து தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. இதேபோல் தடியங்காய் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. கிலோ ரூ.60-க்கு விற்பனையாகி வருகிறது. மிளகாய் ரூ.140-க்கு விற்கப்பட்டது. புடலங்காய் ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, நாட்டு கத்தரிக்காய் ரூ.100, புடலங்காய் ரூ.60, முட்டைகோஸ் ரூ.46, பீட்ரூட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.36, கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.120-க்கு விற்கப்பட்டது. காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் பல்வேறு காய்கறிகளின் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் குறைவான அளவில் வருகிறது. காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. காய்கறி விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.