Thursday, September 28, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்அரிசி விலை ரூ.10 அதிகரிப்பு- அத்தியாவசிய பொருட்கள் விலை 20 சதவீதம் உயர்ந்தது

அரிசி விலை ரூ.10 அதிகரிப்பு- அத்தியாவசிய பொருட்கள் விலை 20 சதவீதம் உயர்ந்தது

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்து விட்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி கிலோ ரூ.130-க்கும், சின்ன வெங்காயம் ரூ.220-க்கும் விலை உயர்ந்து விட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அது மட்டுமின்றி உழவர் சந்தைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அதிகம் கொள்முதல் செய்து விற்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னையில் பரீட்சார்த்தமாக கூட்டுறவு கடைகள் உள்ளிட்ட 87 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 302 ரேஷன் கடைகளில் தக்காளி இப்போது விற்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மற்ற காய்கறிகளான கேரட், வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் சாதாரண ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரிசி கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. இஞ்சி கிலோ ரூ.350-க்கு உயர்ந்து விட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மளிகை பொருட்கள் விலை இன்னும் குறையவில்லை. வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் போதிய அளவு வராததால் விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம் கூறியதாவது:- வெளிநாட்டில் இருந்து பருப்பு வகைகள் வருவது குறைந்து விட்டதால் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்பு 1 கிலோ துவரம் பருப்பு ரூ.120-க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 60 ரூபாய் கூடி ரூ.180-க்கு விற்கப்படுகிறது. சீரகம் 1 கிலோ ரூ.400-க்கு கிடைத்து வந்த நிலையில் இப்போது இரு மடங்கு விலை உயர்ந்து 1 கிலோ சீரகம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நமது உள்நாட்டில் கிடைக்க கூடிய மற்ற மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி விலையும் இப்போது உயர்ந்து விட்டது. இஞ்சி 1 கிலோ ரூ.150-க்கு விற்பனையாகி வந்த நிலையில் இப்போது ரூ.350-க்கு விலை உயர்ந்து விட்டது. உளுந்து ரூ.110-க்கு கிடைத்தது. இப்போது கிலோ ரூ.154-க்கு விற்கப்படுகிறது. மிளகு 1 கிலோ ரூ.550-ல் இருந்து ரூ.700-க்கு விலை உயர்ந்து விட்டது. சோம்பு கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆகவும், கடுகு ரூ. 90-ல் இருந்து ரூ.120 ஆகவும் வெந்தயம் ரூ.90-ல் இருந்து ரூ.120 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

பூண்டு ரூ.150-ல் இருந்து ரூ.180-க்கும், கடலை பருப்பு 1 கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.90-க்கும் விலை உயர்ந்துள்ளது. உதயம் கடலை பருப்பு 1 கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.154 ஆகவும், தனியா ரூ.120-ல் இருந்து ரூ.140-க்கும், பெருங்காயம் 1 கிலோ ரூ. 700-ல் இருந்து ரூ.800 ஆகவும் விலை உயர்ந்து விட்டது. அரிசியை எடுத்துக் கொண்டால் கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. சிவாஜி பிராண்ட் பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ பாக்கெட் ரூ.1,600-க்கு விலை உயர்ந்து விட்டது. பொன்னி பச்சரிசி 25 கிலோ ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது. இதயம் நல்ல எண்ணெய் 1 லிட்டர் ரூ.400-ல் இருந்து ரூ.440-க்கு உயர்ந்து விட்டது. கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.195 ஆகி விட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள் போதாது. இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால்தான் அனைத்து பொருட்களின் விலையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியம். இவ்வாறு மாரித்தங்கம் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments