நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாபநாசம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எங்கள் பகுதியில் உள்ள நடுகண்ட விநாயகர் கோவில், வாழுகந்த அம்மன் கோவில், உச்சினி மாகாளி அம்மன் கோவில், சங்கி பூதத்தார் கோவில் திருப்பணி கமிட்டியினர் சேர்ந்து ரூ.13 லட்சத்திற்கும் மேல் கோவில் பணத்தினை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மண்டல தணிக்கை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். இதில் அந்த கோவில்களில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 576 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், மேலும் கோவிலில் பதிவேடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தகுந்த அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் மண்டல அலுவலரின் தணிக்கை அறிக்கை மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து ஆவணங்களுடன் நெல்லை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தார்.