திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. அப்போது நித்யகைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் அவர்களை அறியாமல் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதற்கு பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்படும். அதன்படி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 10 மணி முதல் 11 மணி வரை, ஸ்ரீசீதாலட்சுமணருடன், கோதண்டராமசுவாமி உற்சவர்களுக்கு, திருமஞ்சனம் நடந்தது பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப் பட்டது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க புஷ்பயாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. துளசி, சாமந்தி, கன்னேறு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, தாமரை, அல்லி, தாழம்பூ என 11 வகையான மலர்கள், ஆறு வகையான இலைகள் என மொத்தம் 3 டன் மலர்களால் சுவாமிக்கும், தாயாருக்கும் புஷ்ப யாகம் நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு கோதண்டராமசுவாமி, சீதா லட்சுமணருடன் கோவில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா, உதவி நிர்வாக அதிகாரி மோகன், கார்டன் இணை இயக்குனர் ஸ்ரீநிவாசலு மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.