Monday, June 5, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்பிரதமர் மோடி நாளை வருகை- நீலகிரியில் விடுதிகள், ஓட்டல்கள் தீவிர கண்காணிப்பு

பிரதமர் மோடி நாளை வருகை- நீலகிரியில் விடுதிகள், ஓட்டல்கள் தீவிர கண்காணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மசினகுடிக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலமாக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு முறை மற்றும் பாதுகாப்பு முறைகளை கேட்டறிந்து, யானைகளுக்கு உணவும் வழங்குகிறார். பின்னர் யானை பாகன்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடும் பிரதமர், தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டுகிறார்.

முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அவர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, முதுமலை, கூடலூர், மசினகுடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்குமண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் நீலகிரிக்கு வந்துள்ளனர். கூடலூர், முதுமலை, உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடலூர், மசினகுடி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

அங்கு போலீசார் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் பிடித்து விசாரித்து வருகின்றனர். மாநில எல்லைகளிலும், மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அங்குள் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அங்கு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது இருந்தால் உடனே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.

முதுமலை வனப்பகுதி என்பதால் பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதுமலை வரும்போது அவரை காண மக்களுக்கு அனுமதியில்லை. ஊட்டியில் இருந்து மசினகுடி வருபவர்கள் பொக்காபுரம் சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல கூடலூரில் இருந்து வருபவர்கள் தொரப்பள்ளி பகுதியிலேயே நிறுத்தப்படுவார்கள். பிரதமரின் வருகையை அடுத்து நேற்று மாலை முதல் கூடலூர்-மைசூரு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. அரசு பஸ்கள் மட்டுமே பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் முதுமலை சாலையில் இன்று மாலை முதல் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனசோதனை சாவடி வழியாக பொது மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல இன்று மாலை 4 மணி முதல் நாளை காலை 10.30 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. இதேபோல மாவட்டத்தில் அமைந்துள்ள கக்கநல்லா, தொரப்பள்ளி சோதனை சாவடி வழியாகவும் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த நேரத்தில் நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லவும், கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரவும் மாற்று பாதையாக கூடலூர்-தேவர்சோலை, பாட்டவயல்-சுல்தான் பத்தேரி வழியை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்க தளத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. எம் 17 ரக ஹெலிகாப்டரில் பிரதமர் பயணிப்பதால், அந்த ரக ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள மேல் ஹம்மனஹள்ளியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு மசினகுடிக்கு வந்தது. அங்கிருந்து மீண்டும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு இயக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 3 முறை ஹெலிகாப்டர் இந்த தளத்தில் ஏறி, இறங்கி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளும், ஆய்வு செய்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments