பிரதமர் நரேந்திரமோடி உடை விஷயத்தில் தனி கவனம் செலுத்தும் வழக்கத்தை வைத்துள்ளார். எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அந்த மாநிலத்துக்கு ஏற்ப உடை அணிவது அவரது சிறப்பாகும். சில சமயங்களில் மத, இன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பவும் அவர் ஆடை அணிவது உண்டு. அவர் அணியும் ஆடைகள் இளைஞர்கள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதன் மூலம் அவர் அணியும் ஆடைகளுக்கு மவுசு அதிகரிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்கு வந்த பிரதமர் மோடி ராணுவ வீரரைப் போல கேமோ சட்டை, பேன்ட், ஜாக்கெட், தொப்பி அணிந்து கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தார். இந்த உடை அலங்காரம் பிரதமர் மோடியை சற்று வித்தியாசப்படுத்தி காட்டியதுடன் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. பா.ஜ.க.வினர் மற்றும் இளைஞர்கள் மிடுக்கான உடை அணிந்திருந்த மோடியின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் மோடி அணிந்திருந்த ‘கேமோ’ ஆடை திருப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ‘தி சென்னை சில்க்ஸ்’ குழுமத்தின் திருப்பூர் எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிறுவனம் மோடி அணிந்திருந்த ஆடையை தயாரித்துள்ளது. இது திருப்பூருக்கு கிடைத்த பெருமை என அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமரின் மிடுக்கான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:- கேமோ சர்ட், டீ- சர்ட், பேன்ட் உள்ளிட்ட ஆடைகளை 15 ஆண்டுகளாக தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறோம். 25 நாடுகளுக்கு மேல் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த ஆடைகள் நாடு முழுவதும் டெகத்லான் ஷோரூம்களில் விற்கப்படுகிறது. காடுகளில் வேட்டைக்கு செல்பவர்கள், சுற்றி பார்க்க செல்பவர்கள்.மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்கள் கேமோ ஆடைகளை அணிவார்கள். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த ஆடைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 சதவீதம் காட்டனால் இவை தயாரிக்கப்படுகிறது. வியர்வை தேங்காத வகையில் இயற்கையை பறைசாற்றும் வகையில் தரமும், டீசர்ட் நிறமும் இருக்கும்.
பிரதமரின் முதுமலை பயணத்துக்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் குழு பெங்களூருவில் உள்ள டெகத்லான் ஷோரூமில் கேமோ ஆடைகளை கொள்முதல் செய்தது. குறிப்பாக எங்களது நிறுவனமான எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் ஆடைகளை தேர்வு செய்துள்ளனர். திருப்பூரில் தயாரான கேமோ ஆடையை அணிந்து ஜங்கிள் சபாரி சென்றபோது பிரதமர் கம்பீரமாக காட்சியளித்தது திருப்பூருக்கு மிகப்பெரிய பெருமை. இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ‘கேமோ’ ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது இந்தியாவிலும் பயன்பாடு அதிகரித்து வருகிறது.பிரதமர் மோடி திருப்பூரில் தயாரித்த ஆடையை அணிந்து மிடுக்கான தோற்றத்துடன் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளார். இனிமேல் இளைஞர்கள் மத்தியில் திருப்பூரில் தயாராகும் டீ-சர்ட்டுகள், கேமோ ஆடைகளுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்றார்.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் அணியக்கூடிய டீ-சர்ட்டுகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆடைகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்ட போது அவர் அணிந்திருந்த டீ-சர்ட் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அந்த டீ-சர்ட்டை திருப்பூரை சேர்ந்த நிறுவனமே தயாரித்து கொடுத்தது. தற்போது பிரதமர் மோடி அணிந்திருந்த கேமோ ஆடையையும் திருப்பூர் கார்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதன் மூலம் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் திருப்பூரில் தயாரிக்கக்கூடிய ஆடைகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.