தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் ஏழை மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தக்காளியின் பயன்பாட்டை குறைத்து விட்டனர். 1 கிலோ, 2 கிலோ என தக்காளி வாங்கிய மக்கள் இப்போது கால் கிலோ, அரை கிலோ, 100 கிராம் என குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி அதிகமாக வந்தாலும் விலை குறையவில்லை. வெளி மாநிலங்களில் அதிக விலைக்கு வாங்கி வருவதால் இன்னும் சென்னையில் தக்காளி விலை குறைய வில்லை. சில்லறை காய்கறி கடைகளில் தக்காளி கிலோ ரூ.100, ரூ.120 என்றே விற்கிறார்கள்.
தமிழக அரசு கூட்டுறவுத் துறை மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்றாலும்கூட அவை போதுமானதாக இல்லை. குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனை செய்யப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன. தக்காளி விலை குறையாமல் இருப்பதால் ஓட்டல்களில் தக்காளி பயன்பாடு கணிசமாக குறைக்கப்பட்டு விட்டன. சாம்பாருக்கு மட்டும் ஏதோ சிறிதளவு பயன்படுத்துகின்றனர். தக்காளி பயன்படுத்தக் கூடிய உணவுகள் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டு விட்டன. தக்காளி சட்னி வாடிக்கையாளருக்கு வழங்குவது இல்லை. அதற்கு பதிலாக புதினா, கொத்தமல்லி சட்னி வழங்குகின்றனர். சைவ ஓட்டல்களில் மதியம் விற்பனை செய்யப்படும் தக்காளி சாதம் நிறுத்தப்பட்டு உள்ளது.
ரூ.40, ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி சாதம் மதிய உணவில் பெரும்பாலும் சேர்த்து கொள்வார்கள். தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதமே அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரிய அளவிலான ஓட்டல்களில்கூட தக்காளி பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. சாலையோர கையேந்தி பவன், சிறிய ஓட்டல்களில் கூட தக்காளி சட்னி, சாதத்தை பார்ப்பது அரிதாகி விட்டது. இதேபோல வீடுகளில் அன்றாட சமையலில்கூட தக்காளி பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. அனைத்து காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்ட நிலையில் மக்கள் குறைந்த அளவிலேயே அன்றாட தேவைக்கு மட்டுமே வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறும்போது, தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட முக்கியமான காய்கறிகள் விலை உயர்ந்ததால் மக்கள் குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. தினசரி தேவைக்கு மட்டுமே காய்கறிகளை வாங்குகின்றனர். இதனால் வியாபாரமும் குறைந்து உள்ளது என்றனர்.