Tuesday, June 6, 2023
No menu items!
Homeசினிமா செய்திகள்ஐஸ்வர்யா வீட்டு லாக்கர்களில் சோதனை நடத்த போலீஸ் முடிவு

ஐஸ்வர்யா வீட்டு லாக்கர்களில் சோதனை நடத்த போலீஸ் முடிவு

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகள் திருடப்பட்டது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து லாக்கரில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது. இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள்தான் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன்மூலம் ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடப்பட்ட நகைகளும், ஈஸ்வரியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளும் ஒன்றுதானா? என்பதை எளிதில் கண்டு பிடித்துவிடலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.

ஈஸ்வரியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளுக்கு உரிய கணக்கு காட்ட வேண்டியது கட்டாயம் என்பதால் நகைகள் பற்றிய முழு விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி, ரஜினி, தனுஷ் வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரது வீடுகளிலும் ஈஸ்வரி கைவரிசை காட்டி இருக்கலாம் என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. இதுதொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments