ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஒழுகினசேரியில் உள்ள சுடுகாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி படத்துடன் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாரதிய ஜனதா கட்சியினர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 40 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.