அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்களை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.நேற்று ஐ.நா. தலைமையகத்தில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று மற்றவர்களுடன் யோகா செய்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றார். ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. அங்கிருந்து பிரதமர் மோடி காரில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். காரில் இருந்து இறங்கிய அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர். மோடியை வரவேற்கும் வகையில் இந்திய தேசிய பறவையான மயில் மற்றும் தாமரை மலர்களால் வெள்ளை மாளிகை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.