Sunday, September 24, 2023
No menu items!
HomeUncategorizedகோடை விடுமுறையை கொண்டாட குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

கோடை விடுமுறையை கொண்டாட குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

குமரி மாவட்டத்தில் 2 மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது மாத்தூர் தொட்டிப்பாலம். மலைகளை யும் இணைக்கும் இந்த பாலம் 1240 அடி நீளமும், தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும் சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் தொட்டிப்பாலம் என பெயர் பெற்றது. தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும். 104 அடிக்கு கீழே பரளியாறு ஓடுகிறது. தொட்டிப் பாலத்தின் இன்னொரு பகுதி நடை பாதையாக பயன்படுகிறது. இந்த பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம்.

இந்த பாலம் சர்வதேச அளவில் அனைவரின் பார்வையை கவர்ந்து இப் போதும் அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த தொட்டிப் பாலத்தின் மூலம் குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியினர் விவசாயமும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது. காமராஜரின் தொலைநோக்கு பார்வை காரணமாகவே இந்த பாலம் இங்கு அமைந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை செழிப்புடன் வைத்திருக்கிறது. இவ்வாறு விவசாய தேவைக்காக கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் இன்றைக்கு சுற்றுலா தலமாக மாறி திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருவிக்கரை ஊராட்சிக்கு கணிசமான வருவாயை தரும் இடமாக மாறி உள்ளது. கார் பார்க்கிங், நுழைவுக்கட்டணம் வாயிலாக ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் கிடைத்தது.

குத்தகைதாரர் மூலமாக வாகன பார்க்கிங், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் வரும் வாகனங்கள் வெகுதூரத்துக்கு வரிசையாக நின்று கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிறது. வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். நேற்று கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தொட்டிப்பாலத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சென்று இயற்கை அழகை ரசித்தனர். தொட்டிப்பாலத்தின் மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 கழிப்பிடங்களில் ஒரு கழிப்பிடம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஒரு கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. செயல்பாட்டில் உள்ள கழிப்பிடத்தில் வசதிகள் இல்லை. அதனை சீரமைக்க வேண்டும். ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாத்தூர் தொட்டிப் பாலத்தை நவீன மயமாக்குவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இதற்காக சட்டசபையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நவீனமயமாக்குவதற்கு முன்பாக அடிப்படை வசதிகளையாவது செய்துதர முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்தனர். இதேபோல் குளச்சல் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் மாலை வேளையில் குளச்சல் கடற்கரை வந்து பொழுதை இனிமையாக கழித்து செல்வர். மாலை வேளையில் மணற்பரப்பில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை கண்டு களித்து மாலை நேர கடற்கரை காற்று வாங்கி செல்வது வழக்கம். நேற்று மாலை குளச்சல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் குளச்சல் கடற்கரையில் குவிந்தனர். பள்ளி கோடை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெண்கள், சிறுவர்கள், பெரியவர்களின் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிந்தது. அவர்கள் நண்பர்கள், குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கி னர். சிறுவர்கள் மணற்பரப்பில் விளையாடி மகிழ்ந்தனர். அருகில் குளச்சல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று குளச்சல் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததால் குளச்சல் கடற்கரை களைக்கட்டி காணப்பட்டது. இதனால் தள்ளு வண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சி யடைந்தனர். குளச்சல் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் துறைமுக பழைய பாலம் அருகில் மணற்பரப்பில் அமருவது வழக்கம். பலர் மாலை இருள் சூழு தொடங்கியதும் சென்று விடுவர். சிலர் இரவு 8 மணி வரை அமர்ந்து செல்வர். பொதுமக்களின் நலன் கருதி பாலம் முன்பு நகராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு பழுதாகி 6 மாதங்களாகிறது. எனவே பழுதான ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வேண்டும் என கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments