Monday, June 5, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்: அமித்ஷா

மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்: அமித்ஷா

பீகாரின் நவடா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹிசுவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை கடுமையாக தாக்கி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இருவரும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பயங்கரவாதம் வளர உதவியது. அதே நேரத்தில் பிரதமர் மோடி காஷ்மீரில் 370-வது அரசியல் சட்டப்பிரிவை ரத்து செய்தார். சாதி வெறியை பரப்பும் நிதிஷ் குமார் மற்றும் காட்டாட்சியின் முன்னோடி லாலு பிரசாத் ஆகியோருடன் பா.ஜனதா ஒருபோதும் கைகோர்க்க முடியாது. பீகார் முதல்-மந்திரிக்கு பா.ஜனதாவின் கதவுகள் எப்போதும் முடியே இருக்கும்.

பிரதமராகும் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நிதிஷ் குமார் கடந்த ஆண்டு லாலு பிரசாத் யாதவுடன் கரம் கோர்த்து, பா.ஜனதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார். ஆனால் 2024-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கான இடம் காலியில்லை. நிதிஷ் குமார் பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை. பிரதமர் மோடியை, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்வு செய்ய நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டனர். இதைப்போல பீகார் மக்களும் மாநிலத்தின் 40 இடங்களையும் பா.ஜனதாவுக்கு வெற்றியை உறுதி செய்ய முடிவு செய்து விட்டனர். அது நடந்தவுடன், நிதிஷ் குமார் தனது முதல்-மந்திரி பதவியை துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைப்பதாக கொடுத்த வாக்குறுதியை திரும்பப் பெறுவார். ஏனெனில் அவரது பிரதமர் கனவு அப்போது நொறுங்கி இருக்கும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எதிர்த்து வந்தன. ஆனால் ஒரு நல்ல நாளில் பிரதமர் மோடி, வானுயர்ந்த அந்த கோவிலுக்கு அடிக்கல் நாட்டிவிட்டார். பீகாரில் நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகள் முடிவுக்கு வந்து இயல்புநிலை திரும்ப நான் பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக மாநில கவர்னரிடம் காலையில் நான் பேசியதற்கு ஐக்கிய ஜனதாதள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் கோபமடைந்தார். நான் ஏன் பீகாரைப்பற்றி கவலைப்படுகிறேன்? என்றும் கேட்டுள்ளார். நான் மத்திய உள்துறை மந்திரி. பீகாரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் எனக்கும் கவலை அளிக்கிறது. நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி அரசு சாசரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டது. மாநிலத்தில் 2025-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியமைத்தால், இந்த வன்முறையாளர்கள் தூக்கிலிடப்படுவார்கள். இவ்வாறு உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments