மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சங்கரய்யா படத்திறப்பு மற்றும் அமைதி ஊர்வலம் செங்கல்பட்டில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தலைசால் தமிழர் சங்கரய்யாவின் மறைவையொட்டி அவரது படத்திறப்பு மற்றும் அமைதி ஊர்வலம் செங்கல்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு ராட்டிணக்கிணறு பகுதியில் தொடங்கி கட்சி அலுவலகம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்வில் சங்கரய்யாவின் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பி.விஸ்வநாதன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.அன்புச்செல்வன், நகரச் செயலாளர் ச.நரேந்திரன், தலைமை கழகப் பேச்சாளர் செங்கை தாமஸ், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.ராஜ்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் எ.செம்பியன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் அமீன், மாவட்டச் செயலாளர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றுப் பேசினர்.