இரணியல் அருகே உள்ள ஆத்திவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர் பெல்சி நேற்று காலையில் ஊராட்சி அலுவலக ஊழியருடன் கானாங்குளத்தங்கரை பகுதியில் வரி வசூல் செய்ய சென்றார். அப்போது ஒரு வீட்டின் காம்பவுண்ட் கேட் மூடப்பட்டிருந்தது. கேட்டை தட்டிய போது வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மேலும், கேட் உட்புறமாக பூட்டு போடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெல்சி, ஊராட்சி தலைவி அகஸ்டினாளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து இருவரும் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் விசாரித்த போது ஒரு தம்பதியினர் கொரோனாவுக்கு பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக தங்களது 3 மகன்களையும் வீட்டுக்குள் அடைத்து காம்பவுண்டு கேட்டை பூட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவி அகஸ்டினாள் இரணியல் போலீசாருக்கும், குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ், திருவிதாங்கோடு சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமதாஸ், குழந்தைகள் நல உதவி மைய உறுப்பினர்கள் மேகலா, சரத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:- கானாங்குளத்தங்கரையை சேர்ந்த 52 வயதுடைய தொழிலாளி கேரளாவில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு 46 வயதுடைய மனைவியும், 20, 18, 15 வயதுடைய 3 மகன்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் 12-ம் வகுப்பும், 2-வது மகன் 11-ம் வகுப்பும், 3-வது மகன் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர். இவர்களுடன் தொழிலாளியின் மனைவியின் தாயாரும், அண்ணனும் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது மகனுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த தம்பதியினர் தங்களது 3 மகன்களையும் பள்ளிக்கு விடாமல் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். அத்துடன் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழும் வாங்கி கொண்டனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் 3 பேரையும் மீட்டனர். அவர்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் அடைப்பட்டு இருந்தால் உடலில் வலு இழந்து கை, கால் நடுக்கத்துடன் காணப்பட்டனர். அவர்களில் 2-வது மகன் வாய் பேசமுடியாமல் காணப்பட்டான். இதையடுத்து அதிகாரிகள் கேரளாவில் வேலைக்கு சென்றுள்ள தொழிலாளியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அத்துடன் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தைகள் நல மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மூன்று மகன்களையும் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட் டது. அவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை தேவைப்படும் என்றால் சிகிச்சைக்கு அனுப்பவும், இல்லாத பட்சத்தில் காப்பகத்தில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 3 பேர் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை’ என எழுதி காட்டிய மகன் மீட்கப்பட்ட சிறுவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது 2-வது மகன் வாய் பேச முடியாமல் இருந்தான். அவன் அதிகாரிகளிடம் ஒரு வெள்ளை பேப்பரில் ‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அடுத்த வீட்டு பேச்சை ஒட்டுக்கேட்டு என் அப்பாவின் நம்பரை கொடுத்துவிட்டேன் என்னை துரோகி என்று சொல்லிட்டாங்க. என்னை எப்போது பார்த்தாலும் சந்தேகப்படுவாங்க. நான் என் அப்பா நம்பரை கொடுக்கவும் இல்லை. அதனால்தான் நான் யாரிடமும் பேசமாட்டேன். எனக்கு சிகிச்சை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என வெள்ளை பேப்பரில் ஆங்கிலம் கலந்து எழுதி காட்டினான். அவனது கையெழுத்து முத்து முத்தாக தெளிவாக இருந்தது. இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.