Wednesday, March 29, 2023
No menu items!
Google search engine
Homeதமிழக செய்திகள்தேர்வு எழுத வராத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் 11-ம் வகுப்பில் ஃபெயிலானவர்கள்-...

தேர்வு எழுத வராத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் 11-ம் வகுப்பில் ஃபெயிலானவர்கள்- தேர்வு பயத்தில் வராதவர்கள் என்று தகவல்

தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வில் 3 அல்லது 4 சதவீதம் பேர் தான் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொது தேர்வில் ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இதில் மொழித்தாள் தேர்வை 49 ஆயிரத்து 559 பேர் எழுதவில்லை. கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வை எழுதவில்லை. இந்த ஆண்டு இது 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நகர்புற மாணவர்களை விட கிராமபுற மாணவர்கள் தான் அதிகம் பேர் தேர்வை எழுதவில்லை என்பது தெரியவந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தேர்வு பயம், உடல்நிலை சரிஇல்லாதது , வைரஸ் காய்ச்சல் பரவல் போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. சில மாவட்டங்களில் பெற்றோருடன் சேர்ந்து மாணவ- மாணவிகள் வேலைக்கு சென்று விடுவதால் அவர்களால் தேர்வுக்கு வர முடியாத நிலை உள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அரசு பள்ளியில் எவ்வளவு பேர், தனியார் பள்ளியில் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில் தேர்வு எழுதாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் பெயிலானவர்கள் என்பது தெரியவந்தள்ளது. கடந்த ஆண்டு நடந்த பிளஸ்- 1 தேர்வில் 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ்-1 துணைத்தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பிளஸ் -2 தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்ற பயத்தில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பெயர்கள் பள்ளி பதிவேட்டில் இருந்து நீக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. அந்த மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரனோ காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டது. சென்ற ஆண்டு பாதி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முழு அளவிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தப்படுவதால் எங்கே நாம் தேர்ச்சி பெற முடியாமல் போய் விடுவோமோ என்ற பயத்தில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராததால் மாணவர்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்பட்டு உள்ளதாகவும் , அவர்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற ஆண்டு 12- ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாததற்கான காரணங்களை அறிய மாநில அரசு விரிவான ஆய்வு நடத்தியிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கே.தேவராஜன் கூறும்போது, மாணவர்களின் பள்ளி கல்வியில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கம் குறித்து இதுவரை சரியான ஆய்வு முடிவுகள் இல்லை. அத்தகைய ஆய்வு அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவும் என்றார். மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவது ஏன்? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும், கல்வி துறை இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் விரிவான முறையில் கலந்து ஆலோசித்து மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை வேண்டும் என முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் தெரிவித்து உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments