காவிரியில் தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டி.எம்.சி. அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறும்போது, “கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இப்போது தண்ணீர் திறக்க முடியாது” என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை முறைப்படி இன்னும் திறந்து விடவில்லை. இதனால் ஜூன், ஜூலை மாதங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு முழுமையாக வந்து சேரவில்லை. எனவே கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தர விட வேண்டும். ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும்.ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்கவும் கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இந்த நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இப்போது தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி இருப்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை உருவாகி வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவதால் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். அவருடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் செல்கிறார். டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசும்போது, “கர்நாடக அரசு உத்தேசித்து உள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்பதால் மத்திய அரசு ஒரு போதும் இதற்கு அனுமதிக்கக் கூடாது” என்று வலியுறுத்த உள்ளனர்.