பாராளுமன்ற தேர்தலை ஓரணியாக நின்று சந்திப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார். வருகிற 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம், தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் ஒரு முதல்-மந்திரியும், மூத்த தலைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத்சிங் கூறியிருந்தார்.
ஆனால், கட்சி தலைவர்தான் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- ஜூன் 12-ந் தேதி தங்களுக்கு வசதியாக இல்லை என்று காங்கிரசும், மற்றொரு கட்சியும் என்னிடம் தெரிவித்தன. எனவே, கூட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்தேன். மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து புதிய தேதியை தெரிவிக்குமாறு காங்கிரசிடம் கூறியுள்ளேன். அதன்பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும். ஆனால், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். கூட்டத்தில் பங்கேற்க சம்மதித்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் அந்தந்த கட்சிகளின் தலைவர்தான் பங்கேற்க வேண்டும்.
எந்த கட்சியாவது, வேறு ஒரு பிரதிநிதியை அனுப்புவதாக சொன்னால், அது ஏற்புடையது அல்ல. உதாரணமாக, காங்கிரஸ் கட்சி, தலைவரை தவிர்த்து வேறு ஒருவரை அனுப்பி வைக்கும் என்ற செய்தி உலவுகிறது. அதை எங்களால் ஏற்க முடியாது. ஒடிசா ரெயில் விபத்து துயரமானது. விபத்துகளை பற்றி நான் பெரிதாக கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால், ரெயில்வேயை அருங்காட்சியகத்தில் வைக்க இந்த அரசு விரும்புகிறது. வாஜ்பாய் ஆட்சியில் நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, 1999-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்துக்காக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதை ஏற்க வாஜ்பாய் விரும்பாதபோதிலும், எனது பிடிவாதத்தால் ஏற்றுக்கொண்டார். பிறகு மீண்டும் வாஜ்பாய் ஆட்சி அமைந்தபோது, ரெயில்வே மந்திரி ஆனேன். ரெயில்வே மந்திரியாக, தற்போதைய பிரதமரின் மாநிலத்துக்கு கூட நான் நிறைய செய்துள்ளேன். ஆனால் அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.