Tuesday, September 26, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்கருணாநிதி பிறந்தநாளையொட்டி வடசென்னையில் 3-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்- மு.க.ஸ்டாலின் தகவல்

கருணாநிதி பிறந்தநாளையொட்டி வடசென்னையில் 3-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்- மு.க.ஸ்டாலின் தகவல்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டனர். தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியை வலுப்படுத்த மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை செய்து வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க 234 சட்டசபை தொகுதிக்கும் 234 பேரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதால் இவர்கள் ஒன்றிய பகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பல்வேறு ஆலாசனைகளை வழங்கி வந்தனர்.

வார்டு கவுன்சிலர்கள் மூலம் 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் கட்சியில் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்தான் அந்த 100 ஓட்டுகளையும் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த 100 ஓட்டில் தி.மு.க. ஓட்டு எவ்வளவு, அ.தி.மு.க. ஓட்டு எவ்வளவு எந்தக் கட்சியையும் சாராத மக்கள் எவ்வளவு பேர் என்ற பட்டியலையும் சேகரித்து வைத்து உள்ளனர். வாக்குச்சாவடி வாரியாக பி.எல்.ஏ. 2 முகவர்களையும் தி.மு.க. தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. மேலும் ‘பூத்’ வாரியாக 21 பேர் வீதம் கட்சி பணியாற்றவும் ‘லிஸ்ட்’ எடுத்து வைத்து உள்ளனர்.

இந்த பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று உள்ளது என்பது பற்றி ஆலோசிக்க தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் வாரியாக கட்சியில் நியமிக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டு பேச வேண்டும். மாவட்ட கழக செயலாளர்களின் செயல்பாடு இன்னும் வேகமாக இருக்க வேண்டும். அப்போது தான் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற முடியும். கட்சியில் உழைக்காதவர்களுக்கு இடமில்லை. தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை, திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதை வேகப்படுத்துங்கள். வெற்றியே நமது குறிக்கோள் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் பணிகளை வேகப்படுத்த வார்டு வாரியாக கூட்டங்களையும் நடத்த வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த வேண்டும். ‘பூத்’ கமிட்டி ‘லிஸ்ட்’ சரியில்லை என்றால் அதை மாற்றி அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் ஒவ்வொரு அணிகளிலும் நியமிக்க வேண்டிய நிர்வாகிகளை நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள். கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியன்று வட சென்னையில் (புளியந்தோப்பு) மிகப்பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சியினர் தோழமை கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்து கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு பிரிவு ஆஸ்பத்திரியை திறந்து வைப்பதுடன் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். ஜூன் 15-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமான விழாவாக நடத்தப்படுகிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்று பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து திரளாக வந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியதாக கூறப்படுகிறது. கட்சி பணிகளை ஒழுங்காக செய்யாவிட்டால் மாற்றப்படுவீர்கள் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments