தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் குலசேகரன்நல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நர்சிங் ஹோமில் தங்கி நர்சிங் படித்து வருகிறார். இளம்பெண்ணின் உறவுக்கார வாலிபர் சிவகுமார் (வயது 25). நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டியை சேர்ந்த சிவகுமாரின் சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக சிவகுமார் மண்டைக்காட்டில் சகோதரி வீட்டில் தங்கி, அப்பகுதியில் படகு கட்டும் கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமாரும், நர்சிங் மாணவியும் உறவினர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி சிவகுமார், தனது சகோதரி குழந்தைக்கு பிறந்த நாள் என கூறி, நர்சிங் மாணவியை மண்டைக்காட்டிற்கு அழைத்து வந்தார்.மண்டைக்காடு வந்த மாணவிக்கு, சிவகுமார் குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தாராம். குளிர்ப்பானம் குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்தார். அப்போது சிவகுமார் , மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக சமாதானம் கூறினாராம். இதற்கிடையே சிவகுமாரின் வீட்டினர், நர்சிங் மாணவியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகுமார் மற்றும் அவரது தந்தை பால்ராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.