Thursday, September 28, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்நீலகிரி பழங்குடியின வாலிபர்களுக்கு விருது: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வழங்கினார்

நீலகிரி பழங்குடியின வாலிபர்களுக்கு விருது: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வழங்கினார்

இங்கிலாந்து ராணி கமிலாவின் சகோதரரும், மறைந்த வன பாதுகாவலருமான மார்க் ஷண்டால் உருவாக்கப்பட்ட ‘எலிபெண்ட் பேமிலி’ என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆசிய காடுகளில் யானைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிறுவனம் ஆசிய காடுகளில் வனவிலங்குகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை தரும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ‘எலிபெண்ட் பேமிலி’ நிறுவனம் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இந்த விருதுகளை வழங்கினர்.

இந்தியாவில் உள்ள ‘ரியல் எலிபெண்ட் கலெக்டிவ்’ என்ற தன்னார்வ நிறுவனம், இங்கிலாந்தின் ‘எலிபெண்ட் பேமிலி’ நிறுவனத்துடன் இணைந்து நீலகிரி மலைப்பகுதியில் அதிகம் காணப்படும் லந்தானா கேமரா என்ற உண்ணி செடியை கொண்டு முழு அளவிலான யானை சிலைகளை உருவாக்கி வருகிறது. பெட்டா குரும்பா பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் லந்தானா யானை சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த கைவினை பொருள்கள் சுற்றுச்சூழலில் இருந்து ஆக்கிரமிப்பு உயிரினங்களை அகற்றுவதுடன் வனத்தை சார்ந்துள்ள சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.

இந்த நிலையில் லந்தானா யானை சிலைகளை உருவாக்கும் கைவினை கலைஞர்களின் பிரதிநிதிகளாக நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ரமேஷ் மாறன் (வயது 32), விஷ்ணு வர்தன் (29) இருவருக்கும் மதிப்பு மிக்க ‘மார்க் ஷண்ட்’ விருதை மன்னரும், ராணியும் வழங்கினர். மேலும் இந்த விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வஸ் ‘தாரா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். அவருக்கு யானை சிலை வழங்கப்பட்டது. முதுமலையில் உள்ள தெப்பாக்காடு யானைகள் முகாமை சுற்றி பயணிக்கும் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை மனதைக் கவரும் வகையில் வழங்கியதன் மூலம் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments