Wednesday, March 29, 2023
No menu items!
Google search engine
Homeஇந்தியா செய்திகள்நாகாலாந்து, மேகாலயாவில் புதிய முதல்-மந்திரிகள் பதவி ஏற்பு - பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

நாகாலாந்து, மேகாலயாவில் புதிய முதல்-மந்திரிகள் பதவி ஏற்பு – பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டன. அங்கு ஆட்சியில் இருந்து வந்த என்.டி.பி.பி. கட்சி 25 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க. 12 இடங்களிலும் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தன. இந்த மாநிலத்தில் முதன் முதலாக 2 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு நைபியு ரியோ மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கவர்னர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு கோரினார். அவரது அழைப்பு ஏற்கப்பட்டது.

நைபியு ரியோ (வயது 72) தலைமையிலான புதிய அரசின் பதவி ஏற்பு விழா, தலைநகர் கோஹிமாவில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் நட்டா, அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நைபியு ரியோ முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் இல.கணேசன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி ஏற்றுள்ள நைபியு ரியோவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி 27-ந்தேதி நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. அங்கு கான்ராட் சங்மாவின் என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்தக் கட்சி பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து கான்ராட் சங்மா, கவர்னர் பாகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் புதிய அரசு பதவி ஏற்கும் விழா மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடந்தது.

விழாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மாவுக்கு (வயது 45) கவர்னர் பாகுசவுகான் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து என்.பி.பி. கட்சியின் பிரஸ்டோன் டைன்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர். கூட்டணிக்கட்சியான பா.ஜ.க. சார்பில் அலெக்சாண்டர் லாலூ ஹெக், யு.டி.பி. கட்சியின் பால் லிங்டா, கிர்மென் சில்லா உள்ளிட்ட (துணை முதல்-மந்திரிகள் உள்பட) 11 பேர் மந்திரி பதவி ஏற்றனர். முதல்-மந்திரி கான்ராட் சங்மாவையும் சேர்த்து மொத்தம் 12 பேர் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ளனர். அங்கு 12 பேர் தான் மந்திரிசபையில் இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் நட்டா ஆகியோர் கலந்து கொண்டு கான்ராட் சங்மாவையும், புதிய மந்திரிகளையும் வாழ்த்தினர். புதிய மந்திரிசபைக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்ற பின்னர் முதல்-மந்திரி கான்ராட் சங்மா நிருபர்களிடம் பேசுகையில், “உள்கட்டமைப்பு, சாலை, மின்சாரம், நீர் இணைப்புகளை மேம்படுத்துவதைத் தவிர பல திட்டங்களை செயல்படுத்துவதற்கு நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய பகுதிகள் மற்றும் துறைகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.” என குறிப்பிட்டார். கான்ராட் சங்மா தொடர்ந்து 2-வது முறையாக முதல்-மந்திரி பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments