காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தின விழாவையொட்டி ‘மிஷன் 11’ என்கிற திட்டத்தை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். ரத்த சோகை இல்லாத மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இதைத்தொடர்ந்து பல்துறை சார்ந்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. ‘மிஷன் 11’ திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:- கிராமங்கள் தோறும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ரத்தசோகை தடுப்பு முறைகளான சரிவிகித உணவு உட்கொள்ளுதல், இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளான பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை, வெல்லம், கேழ்வரகு போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் சுகாதார கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை பயன்படுத்துதல் விழிப்புணர்வு கூட்டங்களில் இடம்பெற வேண்டும்.
பல்துறையினை சார்ந்த 49 வயது வரை உள்ள பெண் பணியாளர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை பரிசோதனை செய்தல், ரத்தசோகை கண்டறியப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து மீண்டும் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும். இந்த சிறப்பு திட்டம் வெற்றி பெற சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, தொழில் துறை ஆகிய பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஹேமலதா ஞானசேகர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரியராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.