Thursday, September 28, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் என்ஜினீயரிங் மாணவர் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு- கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி...

மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் என்ஜினீயரிங் மாணவர் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு- கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்

ஆவடி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்த போது யார்? எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. இதுபற்றி அறிந்த ‘மென டோரா அறக்கட்டளை’ தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது. அங்கு அவருக்கு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதில் அந்த வாலிபர் விரைவில் குணமடைந்தார். இதைத்தொடர்ந்து வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் என்ஜினீயரிங் படித்து வந்ததும் தெரிய வந்தது.

போதை பழக்கத்துக்கு அடிமையான அவர் மன நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்திருப்பதும் பின்னர் ஆவடி ரெயில் நிலையத்தில் வழிதெரி யாமல் சுற்றி வந்ததும் தெரிந்தது. தற்போது மாணவர் நல்ல முறையில் குணமாகி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த விவரங்களின்படி பீகாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தேடி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் மீட்கப்பட்ட வாலிபரை மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் ஒப்படைத்தார். முன்னதாக வாலிபருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக நடந்தது.

ஒரு மாதத்துக்கு பின்னர் மாயமான வாலிபரை மீட்டுக்கொடுக்க பெரும் உதவியாக இருந்த தொண்டு நிறுவனத்துக்கும், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசுக்கும் வாலிபரின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறியதாவது:- ஆவடி ரெயில் நிலையத்தில் வீடின்றி தங்குவதற்கு இடமின்றி ஒரு நபர் மிகவும் முடியாத நிலையில் உள்ளதாக ஹெல்ப்லைன் மூலமாக மெனடோரா அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இ.சி.ஆர்.சி. மூலமாக அந்த நபரை மீட்டெடுத்து பிப்ரவரி 21-ந் தேதியில் இருந்து தற்பொழுது வரை நம் பாதுகாப்பில் இருந்து வந்தார். அவரிடம் இருந்து தொலைபேசி எண் போன்ற விவரங்களை சேகரித்து பீகாரில் உள்ள உறவினரை அழைத்தோம். அவர்கள் உடனடியாக வந்ததன் அடிப்படையில், அந்த குடும்பத்துடன் அந்த நபரை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதுபோன்ற நிகழ்வு முதலாவதாக கிடையாது, இதேபோல் 35 நபர்கள் மீட்டெடுத்தும், 20 நபர்களை குடும்பத்துடன் ஒருங்கிணைப்பும் செய்திருக்கிறோம். இது ஒரு நல்ல முன்மாதிரியான மீட்டெடுப்பு சம்பவம் என்பதால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 200 எண்ணிக்கையில் தீவிர சிகிச்சை பிரிவிலான நபர்களுக்கு உரிய சிகிச்சை செய்துள்ளார்கள். 35 நபர்களை தெருக்களில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 18 நபர்களை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் அந்த நபர்களை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத குடும்பங்களை பார்த்திருக்கிறோம். அப்படிபட்டவர்களை தொண்டு நிறுவனம் மூலமாக காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அறக்கட்டளை இயக்குனர்கள் ரதீஷ்கான் கோட், ரெவலீனா, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மா கவுரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments