Sunday, September 24, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்போட்டி ஓ.கே.! ஆனால் மோசடி கூடாது: மெட்டா மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் மிரட்டல்

போட்டி ஓ.கே.! ஆனால் மோசடி கூடாது: மெட்டா மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் மிரட்டல்

உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக ‘திரெட்ஸ்’ எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. துவங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 7 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் அதனுடன் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘திரெட்ஸ்’ செயலியின் வடிவமைப்பு அம்சங்கள் குறித்து ஒரு பயனர் அது டுவிட்டரின் பிரதி என்று பதிவிட்டிருந்தார். அதனை ஆமோதிப்பதுபோல், எலான் மஸ்க் ஒரு சிரிக்கும் முக எமோடிகான் பதிவிட்டிருந்தார். தற்போது 3 கோடிக்கும் அதிகமான பயனர்களை பெற்றுள்ள நிலையில், டுவிட்டரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கை எதிர்நோக்குகிறது.

“டுவிட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக மெட்டா பயன்படுத்தியிருக்கிறது. இது ஒரு குற்றச்செயல். டுவிட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் ரகசியமான உயர் தகவல்களை அறிந்த மற்றும் அணுகக்கூடிய பல முன்னாள் டுவிட்டர் ஊழியர்களையும் மெட்டா பணியமர்த்தியிருக்கிறது. டுவிட்டர் தனது அறிவுசார் சொத்துரிமைகளை கண்டிப்பாக அமல்படுத்த விரும்புகிறது. டுவிட்டர் வலைதளத்தின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் ரகசியமான உயர் தகவல்களைப் பயன்படுத்துவதை நிறுத்த மெட்டா உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எலான் மஸ்க்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க்கிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, “போட்டி நல்லது ஆனால் ஏமாற்றுவது நல்லதல்ல” என ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால், இதற்கு பதிலளிக்கும்விதமாக மெட்டா செய்தித்தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் ஒரு திரெட்ஸ் பதிவில் “திரெட்ஸ் வலைதளத்திற்காக பணியாற்றும் பொறியியல் குழுவில் எவரும் முன்னாள் டுவிட்டர் ஊழியர் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். பல சிக்கல்களுக்கிடையில் டுவிட்டர் நிறுவனம் போராடி வந்தாலும், மிகப்பெரிய சமூகவலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தை இதுவரை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு, பல போட்டியாளர்கள் உருவானாலும் எவரும் டுவிட்டரை வெல்ல முடியவில்லை.

இந்த பின்னணியில், மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ், டுவிட்டருக்கு மிகப்பெரிய புதிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரெட்ஸ் வலைதளத்தில், பயனர்கள் தங்கள் உரை மற்றும் இணைப்புகளை பதிவிடலாம். மேலும் மற்றவர்களிடமிருந்து வரும் செய்திகளுக்கு பதிலும் அளிக்கலாம், மறுபதிவும் செய்யலாம். இந்த வசதிகள் டுவிட்டரில் இருப்பதை போன்றே பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகநூலின் ரீல்ஸ் எனப்படும் அம்சம், டிக்டாக் எனப்படும் மற்றொரு இணையதள செயலியின் வைரல் வீடியோ பயன்பாட்டை அப்படியே நகலெடுத்து உருவாக்கப்பட்டது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் ஆகிய இரண்டும் பிற உயர்தர அறிமுக இணைய போட்டியாளர்களின் தயாரிப்புகளை (ரீல்ஸ்) அப்படியே காப்பியடித்து தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே விமர்சனம் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments