கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவரது ஆட்சியில் முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக மறைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் உழவூர் விஜயனின் குடும்பத்திற்கு முதல்-மந்திரி பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோல கொடியேறி பாலகிருஷ்ணனின் பாதுகாப்பு அலுவலர் மறைந்த பிரவீனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கிய விவகாரமும் சர்ச்சையானது.
இது தொடர்பாக முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதி முறைகேடாக வழங்கப்பட்டதாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. வழக்கின் விசாரணை முடிவடைந்த பின்னர் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. ஓராண்டு ஆன பின்னரும் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது. சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட வேண்டும். ஆனால் கேரளாவில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தீர்ப்பின் முடிவை அறிய ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.