தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ராகவ் பினானி, தான்யா மணிக்ட்லா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேட்கர், சஞ்சய் மிஸ்ரா, ஹிரித்து ஹருண், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தை ஜோதி தினேஷ் பாண்டே, ரியா ஷிபு இணைந்து தயாரித்துள்ளனர். சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பைக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.