Monday, June 5, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்டி.எம்.சவுந்தரராஜன் சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

டி.எம்.சவுந்தரராஜன் சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 24-ந் தேதி தலைமைச் செயலகத்தில், பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, “டி.எம்.சவுந்தரராஜன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். 1950-ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்த அவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார்.

டி.எம்.சவுந்தரராஜனுக்கு கருணாநிதியால் 1970-ம் ஆண்டு “ஏழிசை மன்னர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும், 1969-ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசனால் “இசைக் கடல்” என்றும் போற்றப்பட்டார். 2003-ம் ஆண்டு டி.எம்.சௌந்த ரராஜன் பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். தனது குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் 25.5.2013 அன்று மறைந்தார். பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பாடிய புகழ்பெற்றப் பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரி இன்று மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ. சாமி நாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.ரா. செல்வராஜ்,செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன், டி.எம். சவுந்தரராஜன் மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார், மகள் மல்லிகா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments