திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவ விழா நடந்தது. இதனால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது. பிரமோற்சவ விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் குறைந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வி.ஐ.பி.கள் பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த சாதாரண பக்தர்கள் 30 மணி நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். மேலும் இன்று இரவு பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை நடைபெறுகிறது. இதனால் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் நேற்று 54, 620 பேர் தரிசனம் செய்தனர். 24,234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.