Sunday, September 24, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுவை பெற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்புடையதல்ல- திருமாவளவன்

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுவை பெற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்புடையதல்ல- திருமாவளவன்

தானியங்கி மது விற்பனை ஏற்புடையதல்ல எனவும், மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க இருக்கிறேன். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பா.ஜ.க., தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறது. அதை அவர்கள் ஒரு களமாக பயன்படுத்துகின்றனர்.

எனவே கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்துவது, தென் மாநிலங்களின் நலன்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் மக்கள் அந்த முடிவில் இருக்கிறார்கள். என்றாலும், பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான களத்தில் காங்கிரசோடு விடுதலை சிறுத்தைகள் கைகோர்க்கிறது. கர்நாடகத்தில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து, அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என இடைமறித்து அதை நிறுத்தியுள்ளனர். கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு பகுதியில், ஒட்டுமொத்த தமிழ் வாக்காளர்களையும் அவமதிக்கக்கூடிய வகையில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை செய்யும், ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை. படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் தி.மு.க. என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தேர்தல் வாக்குறுதியிலேயே அதை கூறி இருக்கிறார். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முதல்- அமைச்சர் முன்வர வேண்டுமே தவிர, தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுவை பெற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்புடையதல்ல. திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பாடுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் பா.ஜ.க. கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. இந்தியை திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. அதில் ஒரு முயற்சி தான், பிரதமர் மோடியின் 100-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதுவும், அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று. தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது, வேதனை அளிக்கக் கூடிய சம்பவம். மணல் மாபியா கும்பல் அவரை கொடூரமாக தாக்கிப்படுகொலை செய்திருக்கிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மணல் மாபியா கும்பல் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அரசு, சிறப்பு படை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments