தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகளில் தமிழக அரசு முக கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. குமரி மாவட்டத்திலும் அரசு ஆஸ்பத்திரிகளில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றி வருகிறார்கள். நோயாளிகளுக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. புற நோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளும் முக கவசம் அணிந்து வந்தனர். இதேபோல அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 277 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 8 பேரும், தோவாளை தாலுகாவில் 4 பேரும், ராஜாக்கமங்கலம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தலா 3 பேரும், குருந்தன்கோடு பகுதியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது.