நாகர்கோவிலில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி ஆட்சியாளர்களின் குறைகளை எடுத்துக் கூறுவது இயல்பு.அதைத்தான் சமத்துவ மக்கள் கட்சி செய்து வருகிறது. இந்த கட்சி தொடங்கியதில் இருந்து மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகத்தை பலப்படுத்தி வருகிறோம். மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க அரசு தனிப்படை அமைத்து போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சமீப நாட்களாக மாணவர்களை சீரழித்து அவர்களை மூளை சலவை செய்து போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இவற்றை காவல்துறை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை இந்தியாவிலேயே சிறப்பான காவல்துறை என்ற பெயர் பெற்றது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் காவல்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது. பெரிய அளவில் மத கலவரங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளால் பாதிப்புகள் ஏற்பட்டால்தான் அது சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியும் தமிழகத்தை பொறுத்தவரை அப்படி இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை எந்த கட்சியுடன் கூட்டணி என்று கேட்பதை விட சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வியை முக்கியமாக கருதி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.