தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன் சென்னையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் அடர்த்தி அதிகம் நிறைந்த மாநகரமாக உள்ளது. இந்த மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான மாநகர சாலைகள் 3 அடி அல்லது 4 அடி அகலத்துடன் 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன்கோவில், கோட்டார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் இந்த குறுகலான சாலை தெருக்களில் வீடுகள் அமைத்து பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் வீடுகளை பழுது பார்ப்பதற்கும், பழைய வீடுகளை இடித்து புதியதாக வீடுகள் கட்டுவதற்கும் வங்கிகளில் லோன் கேட்க சென்றால் பிளான் அப்ரூவல் வேண்டும் என்று கேட்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழைக்காலம் வருவதால் வீடுகள் இடிந்து விழக்கூட வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி மாநகராட்சிக்குட்பட்ட குறுகலான சாலையில் உள்ள வீடுகளுக்கு விதிகளை தளர்த்தி பிளான் அப்ரூவல் கிடைக்க உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அவர் அளித்த மற்றொரு மனுவில், நாகர்கோவில் மாநகராட்சி 47-வது வார்டுக்குட்பட்ட ரஹ்மத் கார்டன் சுமார் 40 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 275 வீடுகளும், 2000-க்கு மேல் மக்களும் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவையான தார்சாலை, குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் கேட்டு பல முறை மனுக்கள் அளித்தும் எவ்வித பலனும் இல்லை. இப்பகுதி மக்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகி யுள்ளனர். எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை தேவை களை உடனடியாக நிவர்த்தி செய்து உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.