பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்ய, ஜாமீன் பெற முடியாத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்டை நிறுத்திவைக்கும்படி இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர் இமாம் இமாம் வாதிட்டார். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகி வாரண்ட் மீது தற்காலிக தடை பெறலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மார்ச் 13ம் தேதி வரை கைது வாரண்டை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது. அதேசமயம், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இம்ரான் கான் நேரில் ஆஜராவதற்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மார்ச் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.