ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:- உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பத்துக்கு தான் விடியும், நாட்டுக்கு விடியல் கிடைக்காது. என்னிடம் ஆட்சியை கொடுத்தால் தெலுங்கானாவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற நூறு சதவீத இடங்களும் தங்களது மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் என்று அம்மாநில முதல்வர் சட்டம் இயற்றியுள்ளார்.
நானும் அதே போல சட்டம் இயற்றுவேன். இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று முடிவு செய்த பா.ஜ.க. அவர்களின் வரியையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசால் முடியவில்லை, காரணம் அங்கு கலவரத்தை நடத்துவதே பா.ஜ.க.தான். பா.ஜ.க. அல்லாதவர்களை கொலை செய்து வருகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தமிழர்கள் என திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வருகிறது. தேசத்தை துண்டாட கூடிய கட்சி பா.ஜ.க. மட்டுமே. பொது சிவில் சட்டத்தை பொறுத்தவரை, இப்போதுள்ள சட்டத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது? எதற்காக பொது சிவில் சட்டம்? நான் முதல்வரானால் நடுக்கடலில் தமிழக மீனவர் கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் கைகளில் வெடிகுண்டு, ஆயுதங்கள் கொடுத்து அனுப்புவேன். இவ்வாறு சீமான் பேசினார். நிகழ்ச்சியில் சாட்டை திருமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்குளம் ராஜூ, மாவட்ட தலைவர் நாகூர் கனி, மாவட்ட பொருளாளர் ஓரிக் கோட்டை காளீஸ்வரன் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.