ஆந்திர மாநிலம் குண்டூரில் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு கூறியதாவது:- முதல்வருடன் நடந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவில்லை. கிரிக்கெட் மற்றும் விளையாட்டு துறை குறித்து மட்டும் ஆலோசிக்கப்பட்டது. எனது அரசியல் பயணம் விரைவில் இருக்கும். அதற்கு முன்பு மக்கள் மனநிலை அறிந்து, என்னால் என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்த பிறகே அரசியலுக்கு வருவேன். பொதுப்பணி சேவைக்கு செல்லும் முன் மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்கிறேன். இந்நிலையில், நான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவது உறுதி என்ற பிரசாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது. அடுத்த தேர்தலில் எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் 2 அல்லது 3 மாதங்களில் எனது அரசியல் களம் நுழைவு குறித்த செயல் திட்டத்தை அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.