இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் பாதிப்பு நேற்று 4 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அதாவது ஒரே நாளில் 4,435 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக 5,335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 23-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 5,383 ஆக இருந்தது. அதன் பிறகு 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 569, டெல்லியில் 509, கர்நாடகா, தமிழ்நாட்டில் 242, இமாச்சல பிரதேசத்தில் 389, அரியானாவில் 243, குஜராத்தில் 351, உத்தரபிரதேசத்தில் 163, பஞ்சாப்பில் 106, கோவாவில் 120 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 39 ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,826 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 82 ஆயிரத்து 538 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு நாள் தோறும் உயர்ந்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 25,587 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 2,496 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர், பஞ்சாப், கேரளாவில் தலா ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 7-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.