குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மேலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று காலையில் வழக்கமாக வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இரவு கன மழை கொட்டி தீர்த்தது. குழித்துறை பகுதியில் இரவு 7 மணிக்கு லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. பின்னர் இடி மின்னலுடன் கன மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் இதமான குளிர் காற்று வீசியது. தக்கலை, இரணியல், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் இங்கு குளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர்.
பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து இரு மடங்கு உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.35 அடியாக இருந்தது. அணைக்கு 736 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 71 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. செண்பகராமன் புதூர் தோவாளை ஆரல்வாய்மொழி பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 44.8, சிற்றார் 1- 9.4, சிற்றாறு2-7.2, பூதப்பாண்டி 10.2, களியல் 23, கன்னிமார் 2.4, கொட்டாரம் 18.6, குழித்துறை 68, மயிலாடி 23.4, நாகர்கோவில் 41.2, சுருளோடு 1.2, தக்கலை 35.2, இரணியல் 6.4, பாலமோர் 2.4, மாம் பழத்துறையாறு 16, ஆரல்வாய்மொழி 2.2, அடையாமடை 17, குருந்தன்கோடு 9.8, முள்ளங்கினா விளை 32.2, ஆணைகிடங்கு13.2, முக்கடல் 4.