நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் ஊட்டியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற என் மண், என் மக்கள் யாத்திரை நடந்தது. ஊட்டி நகரில் நடந்த யாத்திரையில் பங்கேற்க வந்த அண்ணாமலைக்கு பா.ஜ.க., சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேரிங்கிராசில் தொடங்கிய நடைபயணம் கமர்சியல் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு, மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. நடைபயணத்தின்போது வழி நெடுக திரண்டிருந்த பா.ஜ.க மற்றும் பொதுமக்களிடம் பேசியபடியே சென்றார். இதனால் மக்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழக அரசு, பிற மொழிகளை மதிப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்க அரசியல் சூழல் மாற வேண்டும். அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க 400 எம்.பி.க்களைப் பெற்று, மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார். நீலகிரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஆ.ராசா பாராளுமன்றத்தில் தொகுதிக்கு தேவையானவை மற்றும் மக்களுக்கு தேவையானவை பற்றி பேசுவதில்லை. அதற்கு பதிலாக அவர் சனாதனம், தேசிய அரசியலை மட்டுமே பேசி கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லை.
எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில், மக்கள் குறைகளை எடுத்துரைக்கும் பா.ஜ.க எம்.பி ஒருவரை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். நீலகிரி தேயிலைக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய மந்திரி நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் இங்கு வசிக்கக்கூடிய படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியல் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். பா.ஜனதா அரசு கண்டிப்பாக படுகர் இன மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து பெற்று தரும்.
வருகிற லோக்சபா தேர்தலை பா.ஜ.க. குழந்தைகள் வளர்ச்சிக்கான தேர்தலாகவே பார்க்கிறது. ஆனால், தி.மு.க. தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கான தேர்தலாகவே பார்க்கிறது. எனவே மக்களாகிய நீங்கள் இதனை எல்லாம் புரிந்து கொண்டு, தேர்தலில் பா.ஜனதா கட்சி நிறைவேற்றி வரும் திட்டங்கள், தொலைநோக்கு பார்வைகள், தங்கள் பிரச்சனைகள் பேசக்கூடிய பா.ஜ.க., எம்.பி.,யை தேர்ந்தெடுக்க வேண்டும். 2021-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அவர்கள் சொன்னதை செய்யவில்லை.
நீலகிரி பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் தொகுதி. எனவே மத்திய அரசிடம் நேரடியாக பேசக்கூடிய ஒரு எம்.பி.யை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு நீலகிரிக்கு எண்ணற்ற திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. எனவே மக்கள் தெளிவான முடிவு எடுத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார். இதில் திரளான பா.ஜ.க.வினர் பங்கேற்கின்றனர்.