3 நாள் பயணமாக கொடைக்கானல் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது மாணவிகளிடையே அவர் பேசியதாவது:- மாணவிகள் உயர்ந்த லட்சியத்துடன் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும் அதற்கான நேர்மறை சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். காலத்தை எக்காரணம் கொண்டும் விரயம் செய்யக்கூடாது. ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது மாணவிகள் தங்களை நோபல் பரிசு பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் உயர்த்தி படிக்க வேண்டும். ஏதோ படித்தோம் பட்டம் பெற்றோம் வேலை வாங்கினோம் என இருக்காமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக உலகில் திகழ வேண்டும்.
எனது முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள் எனது அம்மாவும், சுவாமி விவேகானந்தரும்தான். விவேகானந்தர் ஒருவருக்கு மட்டுமல்ல ஏராளமான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அவரைப்போல நம்மை பின்பற்றி பலர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் நமது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகை அச்சுறுத்தி வரும் வெப்பமயமாதலை தடுக்க மாணவிகள் முயற்சி எடுக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்தை உலகளவில் புகழ்பெற செய்ய வேண்டும். பேராசிரியர்கள் தரமான நூல்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். பெண்கள் குடும்பத்தில் மட்டுமின்றி பணியிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். அதே வேளையில் தங்களது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்றார்.
முன்னதாக கவர்னர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், ஏரிச்சாலை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வித வண்ண மலர்களை பார்வையிட்ட அவர் இதனை பராமரித்து வரும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டினார். மூலையாறு பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியை பார்வையிட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அப்போது பழங்குடியின பெண்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடி கவர்னரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தனது விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் திரும்பினார்.
தனது 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 10 மணிக்கு கார் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். அவரை கலெக்டர் விசாகன், எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். கவர்னர் மதுரை புறப்பட்டு சென்றதை முன்னிட்டு மலைச்சாலையில் 10 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வத்தலக்குண்டுவில் இருந்து காட்ரோடு வழியாக கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்கள் பெருமாள் மலை சாலையில் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். கவர்னர் வாகனம் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்து பழைய முறையில் அனுமதிக்கப்பட்டது.