பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் ஆண் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 53 சதவீதம் மட்டுமே பெண் கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும், நகர்ப்பகுதிகளில் 65 சதவீதம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆண்களும், பெண்களும் ஒரே வேலையை, ஒரே கால அளவுக்குள் செய்கின்றனர். ஆனால் ஆண்களின் கூலியில் கிட்டத்தட்ட பாதியை மட்டும் மகளிருக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம்? அதிலும் குறிப்பாக வளர்ந்த மாநிலங்கள் என்று போற்றப்படும் தமிழகத்திலும், கேரளத்திலும் இத்தகைய அநீதி தொடரலாமா?
ஆண்களுக்கு வழங்கப்படும் கூலியில் பெரும்பகுதி மதுக்கடைகள் மூலம் அரசுக்கு செல்லும். மகளிருக்கு வழங்கப்படும் கூலி தான் குடும்பங்களை காக்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.