Tuesday, October 3, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை- நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை- நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற நாளை (வியாழக்கிழமை) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர் நாளை முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகளை நுழைவு நிலை வகுப்பில், அதாவது எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். மே 18-ந்தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் மே 21-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து 2020-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஜூலை 31- ந்தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்தோர் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று ஆகியவற்றை உரிய அலுவலரிடம் இருந்து பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோர்கள், விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்கத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் மே 23-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் மே 24-ந் தேதி இணைய தளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ந்தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments