தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் சபாநாயகம். சென்னை ஆர்.ஏ.புரம் பிஷப் கார்டனில் வசித்து வந்த அவர், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. மறைந்த சபாநாயகம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1945-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய அவர் 31.8.1980 அன்று ஓய்வு பெற்றார். பொள்ளாச்சி சப்-கலெக்டராக சபாநாயகம் தனது பணியைத் தொடங்கினார். முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் தனிச் செயலாளர், சேலம் மாவட்ட கலெக்டர் உள்பட பல முக்கிய அரசுப் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். மத்திய அரசின் கல்வி மற்றும் கலாசார அமைச்சக செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
மாநில அரசின் பல்வேறு கமிஷனின் தலைவராகவும் சபாநாயகம் செயல்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற பிறகு கல்வி, தொழில் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபட்டு சமுதாயத்திற்கு பங்களிப்பை செய்து வந்தார். அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சபாநாயகத்தின் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) பெசன்ட்நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. சபாநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
விடுதலைக்கு முன்பான ஐ.சி.எஸ். காலத்தில் இருந்து தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் முறை வரை 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் சபாநாயகம். ஆட்சிப்பணிக்கு வருவதற்கு முன்பாக ராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நேர்மையும் துணிச்சலும் தலைமை பண்பும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற சபாநாயகம் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றவர். கடந்த ஆண்டு அவரது 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவரது சிறப்புகளை எடுத்துக்கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரும் பேறு. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துள்ள அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’. நூற்றாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகத்தை கவுரவிக்கும் விதமாக அன்னாருக்கு போலீஸ் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. அதற்கான குறிப்பை பொதுத்துறை செயலாளர் (பொறுப்பு) ஜெகநாதன் வெளியிட்டுள்ளார்.