தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து 15வது மலர் கண்காட்சி குமுளி சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி 44 நாட்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில், வேளாண் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும், இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கும் இந்த மலர்கண்காட்சியில் இடம்பெறுகிறது என்றார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு கட்டணமும், கண்காட்சியை காணவரும் மக்களுக்கு குட்டி விமானம் மூலம் குறைந்த கட்டணத்தில் இடுக்கி மாவட்டத்தின் மொத்த அழகை கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.