மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக் மாவட்டத்தின் திண்டோரியில் இருந்து மும்பை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆஷா பணியாளர்கள், பழங்குடியின சமூகத்தினர் என ஏராளமானோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். சுமார் 200 கிமீ பயணம் மேற்கொள்ளும் விவசாயிகள் வரும் 20ம்தேதி மும்பையை அடைய திட்டமிட்டுள்ளனர். பேரணியின்போது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் விவசாயிகள் அணிவகுத்து செல்வதை காண முடிகிறது.
வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 600 ரூபாய் உடனடி நிவாரணம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை விவசாயிகள் பட்டியலிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியான விளைச்சல் இருந்ததால் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும், வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த நிவாரணத்தை உயர்த்தி வழங்கும்படி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.