2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சில குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவதும், அவர்களின் வளர்ச்சித் தடைபடுவதும் தெரிய வந்தது. பல குழந்தைகள் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதால், அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முதலமைச்சர், சமூக நீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான கனவுத் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்து வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறார்.