பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்குள்ள சோட்டடேபூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் போடேலி நகரில் கல்வி தொடர்பாக ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட ரூ.5,000 மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- நான் உங்களுடன் கணிசமான நேரத்தை செலவிடுவதால், ஏழை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் அறிவேன். அந்த பிரச்சினைகளை தீர்க்க நான் எப்போதும் முயற்சிக்கிறேன். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நான்கு கோடி வீடுகளை நமது அரசு கட்டிக் கொடுத்துள்ளதால் இன்று நான் திருப்தி அடைகிறேன். முந்தைய அரசுகளைப் போல் ஏழைகளுக்கு வீடு என்பது வெறும் எண் அல்ல.
ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு கண்ணியம் வழங்க பாடுபடுகிறோம். ஏழைகளின் தேவைக்கேற்ப, அதுவும் இடைத்தரகர்கள் இல்லாமல் வீடுகளை கட்டி வருகிறோம். நமது பெண்களின் பெயரில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டன. என் பெயரில் வீடு இல்லாவிட்டாலும், லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை எனது அரசு வீட்டு உரிமையாளர்களாக்கியது. உலக வங்கியின் தலைவர் (அஜய் பங்கா) சமீபத்தில் காந்திநகரில் உள்ள வித்யா சமிக்ஷா கேந்திராவிற்குச் சென்றார். வெளியூர் சந்திப்பின் போது, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்குமாறு அவர் என்னை வலியுறுத்தினார். மேலும், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உலக வங்கி இருக்க தயாராக உள்ளது. மூன்று தசாப்தங்களாக இழுபறி நிலையில் இருந்த புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதியாக தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலில் ஈடுபடுகிறார்கள் அப்போது நான் முதல்வராகும் வரை, குஜராத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் எந்த அறிவியல் பள்ளியும் செயல்படவில்லை. அறிவியல் பள்ளிகள் இல்லையென்றால், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எப்படி அனுமதி பெறுவீர்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.