அ.ம.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் டி.டி.வி. தினகரன் தனது கட்சிக்கு இதுவரை தலைவர் பதவியில் யாரையும் நியமிக்கவில்லை. அந்த பதவி கடந்த 5 ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. தற்போது அந்த பதவியில் நியமிப்பதற்காக தகுதியான நபரை தேடி கொண்டிருக்கிறார். இவ்வளவு காலமும் தலைவர் பதவி பற்றி வாய் திறக்காத தினகரன் கடந்த செயற்குழுவில் பேசும் போது ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே செயல்பட போகிறோம். எனவே அடுத்தகட்டமாக அவரை சந்திக்க போகிறோம் என்றார். ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்து கொண்டால் அவருக்கு கட்சியில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் டி.டி.வி.தினகரனிடம் ஏற்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி அ.ம.மு.க. பொதுக்குழு நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு முன்பே தலைவர் யார்? என்பதை தினகரன் அறிவிப்பார் என்று தெரிகிறது. தற்போதைய நிலையில் அவருக்கு ஒரே வழி ஓ.பன்னீர்செல்வத்தை இழுத்து தலைவர் பதவி கொடுத்து வைப்பதுதான். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் ஓ.பி.எஸ். பெயரையே பரிந்துரை செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ஓ.பி.எஸ்.சை தலைவராக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி பா.ஜனதாவும் அ.தி.மு.க. கூட்டணி ஒத்துவராத பட்சத்தில் ஓ.பி.எஸ்.-டி.டி.வி.தினகரன் அணிகளை இணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.