Tuesday, September 26, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்கழிவுநீர் லாரிகளுக்கு குடிநீர் வாரியம் கட்டணம் நிர்ணயம்- பொதுமக்கள் முன்பதிவு செய்து பெற வசதி

கழிவுநீர் லாரிகளுக்கு குடிநீர் வாரியம் கட்டணம் நிர்ணயம்- பொதுமக்கள் முன்பதிவு செய்து பெற வசதி

சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி, நெசப்பாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், தாடண்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், 16 கழிவு நீர் உந்து நிலையங்களும் உள்ளன. இவை அனைத்தும் 92 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்டவை ஆகும். சென்னையில் தேங்கும் கழிவு நீரை, கழிவு நீர் லாரிகளில் ஏற்றி இங்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு தினமும் 290 லாரிகள் 1,300 நடை முதல் 1,400 நடை வரை கழிவுநீரை கொட்டுகின்றன.

ஒரு லாரி கழிவுநீரை கொட்டுவதற்காக சென்னை குடிநீர் வாரியம் ரூ.150 வசூலிக்கிறது. ஆனால் இதையும் மீறி சில லாரிகள் கழிவுநீரை மழைநீர் வடிகால், ஏரி, குளம் ஆகிய இடங்களில் கொட்டுகின்றனர். இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும் கழிவு நீரை அகற்ற லாரி உரிமையாளர்கள் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்கின்றனர். 4 கி.மீ. துரத்துக்கு சுமார் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2500 வரையும் வசூல் செய்கிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து கழிவுநீர் லாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி நீர் நிலைகளில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்க கழிவுநீர் லாரிகளில் ஜி.பி.எஸ். பொருத்த வேண்டும். ஒரு லாரிக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி 2 ஆண்டுகளுக்கான உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்ற லாரியை தான் பொதுமக்கள் கழிவு நீரை அகற்ற பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. ஆனாலும் 6 மாதங்கள் ஆகியும் இதுவரை 290 லாரிகளில் 150 லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன. இந்த நிலையில் கழிவுநீர் லாரிகள் பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அதை முறைப்படுத்தவும் கழிவு நீர் லாரிகளுக்கு சென்னை குடிநீர் வாரியமே கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி உத்தேசமாக 2 கி.மீ. தொலைவுக்கு ரூ.650 கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 4 கி.மீ வரை ரூ.850-ம், 8 கி.மீ வரை ரூ.1,100-ம், 12 கி.மீ வரை ரூ.1,300-ம் நிர்ணயிக்க முடிவு செய்து உள்ளது. அதிகபட்சமாக 14 கி.மீ.க்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட உள்ளது.

மேலும் பொதுமக்கள் குடிநீர் கேட்டு முன்பதிவு செய்வது போல கழிவுநீரை வெளியேற்றவும் லாரிகளை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக குடிநீர் வாரிய இணையதளத்தில் தனிப்பகுதி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பதிவு செய்துள்ள லாரிகளை மட்டுமே முன்பதிவு செய்யும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் நீர் நிலைகளில் கழிவு நீர் கொட்டுவதை தடுக்கவும், பொதுமக்களிடம் கழிவு நீர் லாரிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது கழிவு நீரை அகற்றுவதற்கான லாரிகளின் கட்டணம் முறைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கட்டணத்தை முறைப்படுத்த லாரி உரிமையாளர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments