கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நீர்வளத்துறையின் சார்பில் பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. குறிப்பாக, தற்போது கோடைக்காலம் என்பதால் விவசாயிகளின் பாசனத்திற்கு தேவையான தண்ணீரினை அணைகளிலிருந்து திறந்து விடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், விவசாய சங்க பிரதிநிதிகள், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் வெகு நாட்களாக தூர்வாரப்படாததால் தண்ணீர் தேங்கி நிற்பதனால், விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வருவது சிரமமாக உள்ளதாக கோரிக்கை வைத்தனர். விவசாய பிரதிநிதிகளின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தற்போது பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் கொற்றைபாறை முதல் ஆனைக்கிணறு வரை சுமார் 4 கி.மீ நீளத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியினை ஓரிரு நாட்களில் முடித்து விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டுமென துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் வின்சென்ட் லாரன்ஸ், உதவி பொறியாளர் வைஷ்ணவி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.